ஞாபக வெளி

காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட்ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான்.தனது வேலைகள் முடிய இன்னும் சில தினங்கள் ஆகக் கூடும் எனத் தோன்றியது. அருகில்இருந்த ஊரில்தான் அந்த பள்ளிக்கூடம் இருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் போதுஆசையை மந்திரங்களால் கூட அடக்க முடியாது என்று அவன் அறிந்திருந்தான். நெடுநாள்பதுங்கியிருந்த ஆவல் பாய்ந்து வெளிவரக் காத்திருந்த ஒரு மதிய வேளையில் அந்தப்பள்ளியின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான். தண்ணீருக்குள் சாயம் கரைந்துகாணாமல் போவது போல வெயில் கரைந்து கொண்டிருந்தது.

எல்லாமே மாறியிருந்தது அந்தப் பள்ளியைச் சுற்றி. பல வணிக வளாகங்கள் கட்டப்பட்டுமக்கள் கூட்டம் சென்று வந்தபடி இருந்தது. சில கட்டி முடிக்கப்படவிருந்தன. ஏராளமானவீடுகள் முளைத்திருந்தன. இத்தனை கால இடைவெளியில் வாகனங்களின் நெரிசல்அதிகரித்திருந்தது. பள்ளிக்கூடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தனர். இரும்புகேட் பெரிதாகப் போடப்பட்டிருந்தது.

சாலையை கடந்து தெரிந்த மரத்தடிக்குச் சென்றான். வாசலை வெயில் தீண்டாதபடி இருக்கபந்தல் போடப்பட்ட அந்தக் கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தவனை எங்கோ முன்பேபார்த்தது போல் இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் பெஞ்சில் அமர்ந்தான்.படித்துவிட்டு சுருட்டியோ அல்லது கிழித்தோ வீசுவதற்காகவே வாங்கப்பட்டது போல்காணப்பட்டது அந்தத் தாள். கையில் எடுத்து வைத்துக் கொண்டு “ஒரு டீ கொடுங்க‘ என்றபடிதலைப்புகளின் மீது கண் பதித்தான்.

டீயை உறிஞ்சியபடி அப்படியே அள்ளிக் கையில் எடுத்துவிடுவது போலபள்ளிக்கூடத்தையே பார்த்தான். ஊரில் மாற்றங்கள் வந்த பின்பும் ஸ்கூல் பெரிதாகமாறிவிடவில்லை. செடிகள் மரங்களாகவும், மரங்கள் பெரிய மரங்களாகவும்காட்சியளித்தன. முன்னைக் காட்டிலும் மரங்கள் அதிகம் இருந்தன. மஞ்சள் பெயிண்ட்அடித்து பல நாள்கள் பராமரிப்பின்றி அரசுப் பள்ளிகளின் “விதி‘படியே இருந்தன கட்டடங்கள்அனைத்தும். காம்பவுண்டை ஒட்டி இருந்த கட்டடம் காரை பெயர்ந்து இருந்தது. எப்போதோஎழுதப்பட்ட அரசியல் விளம்பரம் மங்கலாகத் தெரிந்தது. ஓரிருமுறை போனால்போகிறதென வெள்ளை அடித்திருக்கக் கூடும். மணல் வெளி பரந்து கிடந்தது மைதானம்எங்கும். காற்றடிக்கும் போது புழுதி பறக்கும் மணல் செந்நிறம் கொண்டு எழும்பும்.

வேர்கள் புதைந்து மேலெழும்பிச் சென்ற அந்த மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாகஇருந்தது. இலைகள் அகன்று நீண்டிருந்தது. கரும்பச்சை நிறத்தில் கொத்தாகத் தொங்கும்நீண்ட புழக்கள் போல காய்த்திருந்தது. அது பால மரம் என்று அவன் அம்மா சொல்லக்கேட்டிருக்கிறான். அந்தக் காயை உடைத்தால் சிறிது சிறிதாக நழுவிக் கீழே விழும்வெண்ணிறமான பால். பச்சை வாசத்துடன் பிசுபிசுக்கும். அவன் கிராமத்தின் வேலிஓரங்களில் அந்த மரங்கள் நிறைய உண்டு. அதில் நீண்ட பாம்பு சுருண்டு தொங்குவது போலகொடிகள் கிடக்கும். ஈக்கள் மொய்த்து புழுவேறி காய்ந்து அழியும்.

“கன்னு போட்ட பசுவோட தொப்புள் கொடி அது. இப்படி மரத்து மேல போட்டா மாட்டுலநல்லா பால் சுரக்குமாம். அதான் இப்படி போட்டிருக்கிறாங்க‘ என்பாள் அம்மா.

செடியில் கொடி போட்டால் மாட்டுக்கு எப்படி பால் சுரக்கும் என்று கேட்க நினைத்ததில்லைஅவன்.

சலசலத்த அதன் கிளைகளில் பெயர் தெரியாத இரு பறவைகள் கிரீச்சிட்டன. மதிய உணவுசாப்பிட்ட பின் கிடக்கும் பருக்கைகளை கூர்மையான அலகுகளால் கொத்தி மைதானத்தைசுத்தமாக்கிக் கொண்டிருந்தன காக்கைகள். அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சின் மீதுஇப்போது கிரானைட் பலகை பதிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரு காகம் உட்கார்ந்துவேடிக்கை பார்த்தது. அந்த வேப்ப மரம் இப்போதும் அவனைப் பார்த்து தலை அசைப்பதாகத்தெரிந்தது. இத்தனை வருடங்களில் பள்ளியின் இருப்பு பெரிதாக மாறிப் போய்விடவில்லை.

மெயின் பில்டிங் முன் வட்டமான படிக்கட்டுகள் கொண்ட தளத்தின் மீது அந்தக்கட்டடத்தின் மேல் மாடி அளவுக்கு நிறுத்தப்பட்டிருந்தது கொடி மரம். அதற்கு நேரெதிரேமுதல் தளத்தில் அந்த வகுப்பறை தென்பட்டது.

அந்த அறைக் கதவின் பெயிண்ட் நிறம் கூட மாறாதிருந்தது வியப்பளித்தது. வெளியில் எந்தபையனையோ, பெண்ணையோ காண முடியவில்லை. பாடம் நடந்து கொண்டிருக்கலாம்.அல்லது தேர்வு நடக்க கூடும். சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டான்.சைக்கிள்கள் நிறுத்தப்படும் அந்தப் பெரிய வேப்ப மரத்தின் அடியில் சைக்கிள் இல்லை.அருகே ஸ்டேண்ட் கட்டியிருந்தார்கள்.

ஒரு சைக்கிளுக்காக பட்ட அவமானம், வசவுகள் அவன் நினைவில் இருந்து உதிர்ந்தன.அப்போது கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். “அரப் பரீட்சையில நல்ல மார்க்எடுத்தா புது சைக்கிள் வாங்கித் தாரேன்‘ என்று எண்ணிக்கை தெரியாத முறையாக அவன்அப்பா சொல்லி இருந்தார். சரிப்பா என்று அவன் சொன்னதை அவன் காப்பாற்றினான்.ஆனால் உழைத்துக் குடித்து, குடித்து அழித்து, கடன் வாங்கி குடித்து, கடன் அடைக்க கடன்வாங்கி என்று புளியமரத்தில் சிக்கி அலைவுறும் மயிர் கற்றைகள் போல அலைவுறப்பழகியிருந்த அவன் அப்பாவால் சைக்கிள் வாங்கித் தரமுடியவில்லை. “உனக்கு எப்போஎன்ன வாங்கித் தரோனும்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா சோறு தின்னயா…படிக்கப்போனயான்னு இருக்கணும். எதிர்த்து கேள்வி கேட்டியன்னா உதைதான் விழும்‘ என்றுஇன்னபிற சொல்லில் அடங்கா வசவுகளை பல முறை கேட்ட பின் அவன் கனவில் இருந்துசைக்கிள் நழுவிச் சென்றுவிட்டது.

பரபரப்பான வாழ்க்கைக்கு பழகிவிட்ட அவன் மனம் இதுபோல் ஓரிடத்தில் நிற்காது. அவன்தொழில் அவனை அவ்வாறு பழக்கியிருந்தது. இருந்தாலும் ஸ்கூலைப் பார்க்க வேண்டும்என்ற விருப்பத்தால் தன்னை மறந்து உட்கார்ந்திருந்தான். அடுக்கப்பட்ட பண்டங்களைப்பார்த்தபடி “வேறென்ன சார் வேணும்‘ உள்ளிருந்து கொண்டே கேட்டான் கடைக்காரன்.அதில் ஒன்றை கைகாட்டிப் பெற்றுக் கொண்டான்.

ட்ட்ட்ரிங்ங்ங்….நீண்ட மணியோசை பள்ளியின் மையக் கட்டடத்தில் இருந்து காற்றில்அலைந்து வந்தது. ஹோய் என்ற பேரிரைச்சலுடன் கடலலை வீசுவது போல மாணவர்கள்வகுப்பில் இருந்து வெளிப்பட்டனர். அதைப் பார்க்க விரும்பாதவனாக திரும்பினான்.பையன்களும் பெண்களும் சிரித்துப் பேசியபடி அவன் இருந்த கடைக்கு வந்தனர். பிடித்ததைவாங்கிக் கொண்டு பேசிச் சிரித்தபடி பிரிந்து சென்றனர். ஆசிரியர்களும் ஒவ்வொருவராகச்சென்று கொண்டிருந்தனர். எல்லோரும் புதிதாக இருந்தார்கள்.

அவன் பார்வையைப் புரிந்து கொண்டான் டீ கடைக்காரன். இந்த ஆள் ஏன்பள்ளிகூடத்தையே வெறிச்சிட்டு இருக்கான் என்று நினைத்தபடி, “முன்ன மாதிரி இல்ல சார்இப்ப இருக்கிற பசங்க…நாங்க படிச்சப்போ பொண்ணுங்களோட கிளாஸ்க்குள்ள பேசறதோடசரி… வெளில முகத்தப் பாக்கவே பயப்படுவோம்..வாத்தியாருங்க மேல அவ்வளவு பயம்…ஆனா இப்ப பாருங்க… வாத்தியார் போறாரேங்கிற பயம் கூட இல்லாம நின்னுகொஞ்சிக்கிறதும் சிரிக்கிறதும்…’ என்று மைதானத்தைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுவிட்டான்.

தூரத்தில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் சைக்கிளில் சாய்ந்தபடி பையன்களும்பெண்களும் ஜோடி ஜோடியாக நின்று பேசுவதை அப்போதுதான் பார்த்தான். வியப்பாகஇருந்தது. இந்த தைரியத்தில் கொஞ்சம் இருந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி திசைதிரும்பி இருக்காது என்பது உண்மை என்று தோன்றியது.

அப்பா எந்த வேலையிலும் நிலையாக இல்லாததால் அவனது படிப்பும் ஏற்ற இறக்கம்கொண்டிருந்தது. அதனாலேயே அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லாமல் இருந்தது.ஒன்றரை வருடங்களுக்கு ஒன்று என வாடகை வீடு போல பள்ளிக்கூடம் மாறவேண்டியிருந்தது.

கடைசியாகச் சேர்ந்ததும் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் இந்த பள்ளிதான். 12-ம்வகுப்பில் ஏதோ ஒரு பாடம் நடக்கும்போது அவன் இப்பள்ளியில் சேர்ந்திருந்தான்.தயக்கத்துடன் அந்த வகுப்பறை முன் நின்றான். “என்ன நியூ அட்மிஷனா? கையில் இருந்தபுத்தகப்பையை பார்த்தபடி கேட்டார் ஆசிரியர். “ஆமா சார்‘. உள்ள வா போய் உட்காரு. வகுப்புஅவனை வேடிக்கை பொருளாக்கியது. கடைசி டெஸ்க்கை அவர் கைகாட்டினார். “புதுசுபுதுசா வரானுங்க..எப்படி படிச்சு பாஸ் பண்ணப் போறானோ…’ முனகியது காதில் விழந்தது.

அந்த டெஸ்க் காலியாக இருந்தது. இடது புறம் மாணவிகள். புதிதாகப் பார்ப்பதாலோஎன்னவோ எல்லோரும் அழகாகத் தெரிந்தனர். மறுமுறை திரும்ப கூச்சமாக இருந்தது.

அடுத்த பீரியடுக்கான மணி அடித்தது. நான்கைந்து மாணவர்கள் காரிடரில் ஓடுவதுதெரிந்தது. அதில் ஒருவன் வேகமாக உள்ளே வந்து அவன் அருகில் தொப்பென்றுவிழுந்தான். அவன் வாயில் இருந்த பாக்கின் வாசத்தையும் மீறி சிகரெட் நாற்றம் முகத்தில்அடித்தது.

“என்ன தனசேகர், மேத்ஸ் கிளாஸ் கட் அடிச்சுட்டியா‘ இடது பக்கம் இருந்து பெண் குரல்கேட்டது. “யெஸ் மேடம்‘ என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

“யார்ரா நீ புதுசா இருக்க?’

“நியூ அட்மிஷன்.’

“பேரென்ன?’

“சிவா…’

“சிவலிங்கமா? சிவக்குமாரா?’ கேட்டுவிட்டு சிரித்தான்.

“அதெல்லாம் இல்ல…வெறும் சிவா.’

“ஓஹோ அப்ப வெட்டி சிவா…சரி எந்த ஊரு?’. சொன்னான்.

“ஏன் அங்கெல்லாம் உனக்கு ஸ்கூல் இல்லயா?’

சிவா முறைத்தான். “என்னடா முறைக்கிற‘ கையை மடக்கி ஓங்கினான் தனசேகர். “ஆளும்அவன் தலையும்‘ என்று பின்னந்தலையில் பட்டென்று அடித்து “தள்ளி உட்காருடா‘ என்றுசொல்லிக் கொண்டே பெண்கள் பக்கம் திரும்பிச் சிரித்தான். சிரிப்பு எதிரொலித்தது.ஆத்திரமாக இருந்தது சிவாவுக்கு.

யாருடனும் பழகுவதுபோல் தெரியவில்லை. தினமும் வம்பிழுத்தான் தனசேகர். வழிதவறிவீட்டுக்குள் வந்து விட்ட பெயர் தெரியாப் பறவைபோல தவித்தான் சிவா. விளையாடகிரவுண்டுக்குச் சென்றாலும் ஒதுக்கப்பட்டான். அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.

அவனுக்கு மகிழ்ச்சி தரும் தருணங்கள் மாடி மேல் இருக்கும் இந்த வகுப்பறைக்கு வரும்வழிதான். கருங்கற்களால் எழும்பிய கட்டடம் அது. ஓரத்தில் அகலமான படிக்கட்டுகள் மேல்செல்ல. கையில் புத்தகப்பையுடன் மேலமே பார்த்தவாறு ஏறுவான். கைப்பிடிச்சுவரையொட்டிய வேப்ப மரத்தின் இலைகள் உதிர்ந்து பறந்து மிதந்து வருவதைரசித்தபடியே ஒவ்வொரு படியாக ஏறுவான்.

நேரம் தனது கால்களை எட்டிப் போட்டபடி முன்னேறிக் கொணடிருந்தது. வந்த வேலையைவிட்டுவிட்டு இப்படி பார்த்திருப்பது அதிகமாகப்பட்டது. 15 ஆண்டுகளில் தன் வாழ்க்கையைஅலைக்கழித்த இந்த பள்ளிக்கூடத்தை பார்க்க கோபமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது.

கடைக்காரன் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சிகரெட் இருக்கா என்றுகேட்டு வாங்கினான். பார்தது போல் இருக்கிறதே என கேட்டு விடலாமா என நினைத்தான்.சொன்னாலும் தன்னை அடையாளம் தெரியப்போவதில்லை. இங்கு கொஞ்ச நாட்களேபடித்தான். அந்த சொற்ப நாளின் ஒரு மதிய வேளைதான் அவனை ஓட ஓட விரட்டியது.

விளையாடப் போக மனமின்றி ஜன்னல் வழி வேடிக்கை பார்த்திருந்தான். தடதடவெனஐந்தாறு மாணவிகள் அவனை நோக்கி வந்தனர். அவர்களில் தலைவி போல் இருந்தவள்அவனிடம் வந்தாள். சிவா…ஈஸ்வரியப் பாத்து நீ என்ன சொன்னே? என்றாள். யாரு?ஈஸ்வரியா? நான் ஒன்றும் சொல்லலையே…அவன் ஒன்றும் புரியாமல் பேசினான்.

நீதான் சொன்னயாமே…ஈஸ்வரி அசிங்கமா இருக்கிறான்னு…அவ அழுதுட்டு இருக்கறா…ஸ்கூலுக்கு படிக்கத்தானே வர்றே…பொண்ணுங்களுக்கு மார்க் போடாதே…முதல்ல உன்மூஞ்சிய கண்ணாடியில பாரு… சொல்லிவிட்டு வேகமாக சென்றனர்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் உட்கார்ந்திருந்தான். ஏற்கெனவே இருந்தமனத் தாங்கள் அவனை அழச் செய்தது. அழுதான். அடுத்த பீரியடுக்கு மாணவர்கள்எல்லோரும் வந்தனர். தனசேகர் தான் முதலில் கவனித்தான். கேட்டான். டேய் இதவிடக்கூடாது…உன்ன பாத்து இப்படி சொல்லிடாளுகல…அவன் தடுத்தும் விஷயம் ஹெட்மாஸ்டர் வரை சென்று விட்டது. சிவா, தனசேகர், ஈஸ்வரி இன்ன பிற தோழிகள் சகிதம்ஹெட் மாஸ்டர் அறைக்கு அழைக்கப்பட்டனர்.
ஏம்மா…அவன் சொன்னானா?
அப்படிதான் என் பிரெண்ட்ஸ் சொன்னாங்க சார் என்றாள் அழுதுகொண்டே.
சார் நான் ஒன்னும் சொல்லல சார்…யாரோ வேண்டாதவங்க சொல்லி இருப்பாங்க சார்…இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடமாட்டாரா என்று கெஞ்சினான்.
அவள் அழுகை பெரிதாகியது. வேறு வழி இல்லாமல் இவனும் அழுதான்.
இங்க பாருப்பா டிசிப்ளின் முக்கியம்…உன்ன பாதி வருஷத்துல ஸ்கூல அட்மிஷன்கொடுத்ததே பெரிய விஷயம்…நீ உங்க அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வா. என்றுசொல்லிவிட்டு எல்லோரையும் அனுப்பினார். தனசேகர் சிரித்துக் கொண்டு வருவது காதில்விழுந்தது.

எதுவும் சொல்லாமல் அவன் அப்பாவை அடுத்த நாள் அழைத்து வந்தான். அவர்குடித்திருந்தார்.உங்க பையன் டிசிப்ளின் இல்லாம இருக்கான்.
என்ன செஞ்சான் சார்..?
பொண்ணுங்கள பாத்து கிண்டல் பண்ணி இருக்கான்.
சார் நான் சொல்லல சார்..
ஒரு வார்னிங் கொடுக்க தான் உங்கள வரச் சொன்னேன்.. இனிமே ஒழுங்கா இருக்கசொல்லுங்க…
மணி அடித்தது….மதிய உணவு வேளை…
வெளியே வந்த போது அவன் அப்பா மிருகமாகி இருந்தார்.
ஏன்டா நாயே…ஒழுங்கா சோத்த தின்னுட்டு படிக்கிறத விட்டுட்டு பொம்பளைகபின்னாடியா சுத்துற…எட்டி உதைத்தார். குப்புற விழுந்தான். மிதித்தார். பள்ளிக்கூடமேஅவனை வேடிக்கை பார்த்தது. நடுத் தெருவில் உடை கிழிந்தவன் போல் மனம் அழுதது.யாரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தான்.
அழுது கொண்டே ஸ்கூலை விட்டு ஓடி வந்தான்…இதே கேட் அருகே வந்த போது திரும்பிபார்த்தான். தூரத்தில் தனசேகர் சிரித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரியுடன்.\அதற்கு பிறகு படிப்பை விட்டு சென்னை சென்று அடிபட்டு மிதிபட்டு, தொழில் கற்று, சொத்துசேர்த்து…இன்று இந்த உயரத்தில் நின்று கீழே பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது தான்ஏறி வந்த உயரமும் அதில் தெரிந்த உதிரம் படிந்த தன் கால் தடங்களும்…
இரவு தனது சிறகை விரித்து பறக்கத் துவங்கி இருந்தது.
என்ன சார்…இந்த ஸ்கூல படிச்சிங்களா…அப்படியே பாத்துட்டே இருங்கீங்க…
ஆமா.. ஆனா கொஞ்ச நாள் தான்…
நான்கூட இங்கதான் படிச்சேன் சார்…விதி என்ன இப்படி டீ போட வச்சிருச்சு…
சிரித்துக் கொண்டே சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல்சாலையை கடந்தான்.
காரில் அமர்ந்து புறப்பட்ட போது அந்த கடையின் மேலே மெல்லிய மஞ்சள் விளக்குஒளியில் தகரத்தில் செய்த அந்த போர்ட் கண்ணில் பட்டது.
கோணல் மாணலாக கையால் எழுதி இருந்தது… கூர்ந்து படித்தான்.

தனசேகர் டீ ஸ்டால்.

தூரத்தில் ஒரு நட்சத்திரம் அவனை பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டிருந்தது.

தினமணி கதிர் – 2008