அகடுஆரப் புல்லி முயங்குவேம்!

kalithogai-324x160

நல்லுடல் வாய்த்தவர்களுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறன் கொண்ட ஊனமுற்றோருக்கும்

காதல் வாழ்க்கை உண்டு. அன்பு கொண்ட அந்த மனங்களுக்கு என்றும் இல்லை மணத்துக்குத் தடை என்பதைக் கூறும் ஒரு பாடல் கலித்தொகையில் (மருதக்கலி:- பா.28) காணப்படுகிறது.

தலைவன், தலைவி தத்தம் உடற்குறையை சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல், மருதன்

இளநாகனார் இயற்றியது.

“என் நோற்றனை கொல்லோ?
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னொடு உசாவுவேன்; நின்றித்தை.”

தனியே நடந்து செல்லும் தலைவியைப் பார்த்து,

“நீரில் மர நிழல் வளைந்து நெளிந்து தெரிவதைப் போல கூனிய உடலைக் கொண்டவளே, நில்!

உன் அழகில் மயங்கினேன். உன்னை விரும்புகிறேன். உன்னோடு பேச வேண்டும்”, என்கிறான் தலைவன்.

துணுக்குற்ற தலைவியோ,”ஆண்டலைப் பறவையின் குஞ்சு போன்ற குள்ளனே, நேரம் தவறிப்  பிறந்ததால் இப்படியான நீ என்னை விரும்புகிறாயா?” என்கிறாள்.

மனம் பதைக்காத தலைவனோ,”கலப்பை போல கூன் முதுகு கொண்ட உன் அழகில் மனதைப் பறிகொடுத்தேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று கூறி அவள் கையைப் பிடிக்க முயல்கிறான்.

“……… வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும்பகல் வந்து எம்மை,
இல்லத்து வாஎன, மெய்கொளீஇ, எல்லா நின்!
பெண்டிர் உளர் மன்னோ? கூறு.”

“சூதாடும் பலகையை எடுத்து நிறுத்தியது போன்ற குள்ளனே, மகளிரிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியாத நீ, யாரும் இல்லாத இந்த உச்சிப் பகல் வேளையில் என் கையைப் பிடித்து இழுக்கிறாயே, உன்னுடன் பெண்கள் யாரும் பிறக்கவில்லையா?” என்று ஆவேசமடைகிறாள் தலைவி.

“கொக்கு போன்ற வளைந்த கூனியே, உன்னைப் பின்னால் அணைத்தால் உன் முதுகு என் நெஞ்சில் குத்தும். அதனால் பக்கத்தில் அணைக்கிறேன்” என்று நெருங்குகிறான். 

அவன் தொட வருவதையறிந்து கோபம் கொள்கிறாள் தலைவி.

“ஆமையை எடுத்து நிறுத்தினாற் போல வளர்ந்தவனே! தோளிரண்டையும் அசைத்து உன்னை

வேண்டாம் என்று உன்னை விலக்கினாலும் காமங்கொண்ட மனத்தோடு நடந்து வருகிறாயே”

என்கிறாள்.

ஆனால், காதலியின் முன் கம்பீரமாகத் தோன்ற வேண்டும் என எண்ணாத காதலன் உண்டோ?

“……..கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்”

எனக் கூறி, “காதலர் உள்ளங்கவரும் என் நடையைப் பார்” என்று குள்ளன் நடந்து காட்டுகிறான்.

“…….நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள்நாம்
உசாவுவம், கோன் அடி தொட்டேன்.”

பின்னர் விளையாடியது போதும் என்றெண்ணும் தலைவன், “இனி உன்னை நான் இகழமாட்டேன்,  இது அரசன் மீது ஆணை, வா இருவரும் மகிழ்ந்து பேச இடம் பார்ப்போம்” என்றழைக்கிறான்.

என்னதான் கோபங்கொண்டு கடிந்து கொண்டாலும், தலைவியின் உதடுகள்தான் பேசின. உள்ளமோ தலைவனை விரும்பியது. அணை திறந்த வெள்ளமாய் அடங்காமல் ஓடுகிறது தலைவியின் அன்பு.

“நானும், இனி உன்னை இகழ்ந்து பேச மாட்டேன்” என்கிறாள்.

“கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடுருவ! வேறாகக் காவின்கீழ்ப
போதர்; அகடுஆரப் புல்லி முயங்குவேம் –
துகள்தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட் டாங்கு.”

“இனியவனே, நாமிருவரும் கூடி இருப்பதைப் பார்ப்போர் நம்மை இகழ்வார்கள். அதைத்

தடுக்க நினைக்கிறேன். அதனால், இந்தக் கோயிலை விட்டு அடுத்து இருக்கும் சோலைக்குச் செல்வோம். கற்றறிந்தோர் தாங்கள் எழுதிய ஓலைச்சுவடியைக் கட்டி அதில் அரக்கு இலச்சினை

இட்டதுபோல் நாம் அன்புடைய நெஞ்சம் கலந்து மகிழ்வோம்”, என்று காதலுக்குப்

பச்சைக் கொடி அசைக்கிறாள் தலைவி.

நன்றி: தினமணி– தமிழ்மணி  3-10- 2010