மொழிபெயர்ப்புப் பார்வைகள்

Picture

எல்லா இலக்கிய வடிவங்களும் மொழிபெயர்ப்பே. சில ஒலிபெயர்ப்புகளாக அமைகின்றன. புனைவுகள், அபுனைவுகள் அனைத்தும் மனதில் ஓடும் கற்பனையின் ஒலிபெயர்த்த மொழிபெயர்ப்பு வடிவங்களே. குழந்தை மழலையில் உதிர்க்கும் ஒலிகளை பட்டாம் பூச்சி பிடிக்கும் சிறுவனைப் போல் விரட்டிப் பிடித்து, புரிந்து அதனை திரும்பச் சொல்லும் தாயிடம் துவங்குகிறது இந்த மொழிபெயர்ப்புப் பணி.

இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் மிக முக்கியமானது. ரஷ்யாவின் தால்ஸ்தோய் என்றாலும், செக் குடியரசின் காஃப்கா என்றாலும், கொலம்பியாவின் காப்ரியேல் கார்சியா மார்க்வேஸ் என்றாலும் அவர்களின் காலங்கடந்த படைப்புகள் எல்லோரும் அறியவும் அவர்களின் இலக்கிய வடிவம் ஒரு அலையாக தோன்றி வளர தமிழில் முடிகிறது எனில் அதற்கு மொழிபெயர்ப்பு எனும் கலையே அடித்தளம் அமைக்கிறது.

ஒரு படைப்பின் வீச்சும் ஆழமும் மொழிபெயர்ப்பின் வழியே பிறமொழிகளில் அறியப்படுகிறது. போற்றப்படுகிறது. மொழிபெயர்ப்பின் பின்னே உள்ள மனச் சாய்வுகள் மொழிபெயர்க்கப்படும் படைப்பின் தன்மையை முடிவு செய்கிறது. இலக்கு மொழியின் வாசகப் பரப்பிற்குத் தக்கவாறு மூல மொழியில் வந்துள்ள படைப்புகளை அணுகுவதுஒருவிதம் என்றால் மூல மொழிப் படைப்புகளை எவ்வித மனச்சாய்வுமின்றி இலக்குமொழி வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டி மொழிபெயர்த்தல் மற்றொரு கோணம் எனலாம்.

அபுனைவுகளைவிட புனைவிலக்கியங்களை மொழிபெயர்க்க ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இலக்கிய உணர்வும், படைப்புணர்வும், ஆளுமையும் அதிகத் தேவையாக உள்ளது. மூல மொழிப் படைப்பின் உணர்ச்சியை, ஆளுமையை, கவித்துவத்தை, படைப்பினூடான மௌனத்தை, வடிவமைதியை இலக்கு மொழியான தமிழில் கொண்டு வர பெருமுயற்சி வேண்டும். அதே நேரம் தம் படைப்புத் திறனை தேவையில்லாமல் அதில் புகுத்து சுய மகிழ்வடைவது கூடாது. அது மூலப் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இழைக்கும் துரோகமாகிவிடும். மிகுதலுமின்றி, குறைதலுமின்றி, விடுதலுமின்றி செய்யப்படுவது நல்ல மொழிபெயர்ப்பு எனக் கொண்டாலும் சில நேரங்களில் கலாச்சாரம், பண்பாட்டுக் காரணிகளால் பிரதியளிக்கும் ஒரு சில சலுகைகளால் ஒரு மொழிபெயர்ப்பாளன் சுதந்திரமாக மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்ப்பு என்பது கத்தியின் மீது கவனமாக நடப்பதாகவும், கயிற்றின் மீது ஆடியபடி நடப்பதாகவும் உள்ளது. அபுனைவுகள் கத்திமுனைக்கும் புனைவுகளை கயிற்றுக்கும் கொள்ளலாம். அபுனைவுகள் கத்தி மேல் நடப்பது போன்று கடினத் தன்மையுடனும் நேர்த்தியுடனும் அளவீடுகள் பிசகாமலும் நோக்கம் சிதறாமலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நிலையில் புனைவுகள் கயிற்றின் மேல் மற்றொரு கயிற்றைப் பிடித்தபடி நடப்பது போன்று சிறிது விலகலுக்கும் சுதந்திரத்திற்கும் இடமளிக்கிறது. எனினும் பெரும் விலகலானது புனைவின் சாரத்தையும் படைப்பையும் அடியோடு சாய்த்துவிடும் தன்மையுடையது.

ஒரு படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும், அதன் நீள அகல ஆழங்கள் என்ன என்ற பல்பரிமாணப் பார்வையை வைப்பதாக உள்ளது காலச்சுவடு பதிப்பகத்தின் “மொழிபெயர்ப்புப் பார்வைகள்” என்ற நூல். 1994-2014 வரையிலான மொழிபெயர்ப்புக் குறித்த தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. பதிப்பாசிரியர் சு.ராசாராம்.

இத்தொகுப்பில் உள்ள ஜி.குப்புசாமியின் “பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புப் பணிகள்” – கட்டுரை என்பதைத் தாண்டி புனைவின் மொழியில் எழுதப்பட்டுள்ளது. புனைவைப் போல வாசிப்பின்பம் ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணக் கட்டுரை. சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டுள்ள குப்புசாமியின் புனைவுத்திறன் நுண்மையாக வெளிப்படும் கட்டுரையாகவும் உள்ளது.

மரபுத் தொடர்களையும், சில சொற்றொடர்களையும் மொழிபெயர்க்கும் போது ஏற்படும் சிக்கலான மொழிபெயர்ப்புகள் சில நேரம் அபத்தமாகச் சென்றுவிடும் அபாயம் மட்டுமல்லாமல் மூலப் படைப்பினை நீர்த்துப் போகச் செய்துவிடும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. The lady with a Dog என்ற தலைப்பு “நாயுடன் கூடிய மாது” என்று மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட கிண்டல், கேலிகளைப் பற்றி நஞ்சுண்டனின் கட்டுரை (பக்.144) சுவாரசியமானது. தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்படும் அபத்தங்களைத் தவிர்ப்பது குறித்து விளக்கும் போது, யு.ஆர்.ஆனந்தமூர்த்தியின் ‘அவஸ்தே’ தமிழவனின் மொழிபெயர்ப்பில் எவ்வாறு அவஸ்தையான மொழிபெயர்ப்பாக வந்துள்ளது என்பதை வரிக்கு வரியான சான்றுகளுடன் நகைச்சுவை ததும்பக் கூறியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் My Name Is Red என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எர்டாக் கோக்னர் உடனான நேர்காணல், அதனை தமிழில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் நேர்காணல் ஆகியவை அ.முத்துலிங்கத்தின் மொழியில் படிக்க சுவாரசியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றன. படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் என்ற மூவரின் இடையே ஒரு மெல்லிய இழை ஓடுவதன் மூலமே சிறந்த மொழிபெயர்ப்புகள் சாத்தியமாகின்றன எனும் இக்கட்டுரையில் முதலில் My Name is Crimson என்று சூட்டப்பட்ட தலைப்பு, பதிப்பக மேற்பார்வையாளரால் My Name is Red என மாற்றப்பட்டது என்ற தகவல் ஆச்சரியமளிக்கிறது.

அதே நேரம் ஜான் பான்வில்லை ‘கடல்’ நாவலின் மொழிபெயர்ப்பின் போது எவ்வளவோ முயன்றும் சந்திக்க முடியாமல் போனது குறித்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள குப்புசாமியின் நேர்காணலும் அதற்கு லண்டன் சென்ற கலைவிமர்சகர் இந்திரன் ஒரு விழாவில் சந்தித்து கேட்ட போது, ஜான் பான்வில் கூறும் காரணம், மொழிபெயர்ப்பாளன் x படைப்பாளர் ஆகியோர் உறவு ஒரே படைப்பின் இரு பக்கங்களாகவும் ஒரு காந்தத்தின் இரு துருவங்களாகவும் ஒரே மனதின் உண்மையுரு மற்றது அதன் நிழலுரு என்பதாகவும் இருக்கும் என்ற உண்மையை புரிய வைத்தது.

மொழிபெயர்ப்பாளன் என்பவன் கண்ணாடி போன்றவன். யாரும் முகம் பார்க்கும் போது அதில் மொழிபெயர்க்கப்பட்ட உருவத்தைத்தான் பார்ப்பார்களே ஒழிய கண்ணாடியைப் பார்ப்பதில்லை. ஆனால் கண்ணாடி இல்லாமல் உருவமும் தெரியாது. மொழிபெயர்ப்பாளனும் அப்படியே. அவனுக்கான அங்கீகாரமும் பாராட்டுகளும் – தன் படைப்பைவிட கோக்னரின் மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்துள்ளது என்ற ஓரான் பாமுக்கின் பாராட்டுப் போல- தமிழில் இன்னும் வழங்கப்படாமலும் அடையப்படாமலும் உள்ளது என்று உணர்த்தும் அ.முத்துலிங்கம் மற்றும் ஜி.குப்புசாமியின் கட்டுரையில் தெரிவிக்கும் கருத்துகள் இப்புத்தகத்தின் சாரத்தின் மிக முக்கியமான பகுதிகள்.

மொழிபெயர்ப்புப் பார்வைகள்

பதிப்பாசிரியர்: சு. ராசாராம்

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ.150.