ஒரு கிராமத்திற்கு இரு ஆண்கள் வந்தடைந்தனர்

wp-1489930884200.jpeg

சில சமயங்களில் குதிரையின் மீது, சில நேரம் கால்நடையாக, காரில் அல்லது மோட்டார் பைக்குகளில், எப்போதாவது டாங்குகளில், அவ்வப்போது ஹெலிகாப்டர்களின் மூலமும் தங்களதுபடைப்பிரிவிலிருந்து வழி தவறி தொலைதூரம் கடந்து இரு ஆண்கள் வந்தடைகிறார்கள். ஆனால் நாம் நிகழக்கூடிய சாத்தியங்களின்படி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நடந்தே வருகிறார்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த முறையாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையில் இது பைபிள் நீதிக் கதை போல வெளிப்படையாக உள்ளது.

இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு நடந்தே வந்து சேருகிறார்கள்; ஆம், எப்போதும் கிராமத்திற்கு, நகரத்திற்கல்ல. அதே நேரம் இரு ஆண்கள் ஒரு நகரத்திற்கு வந்து சேர்ந்தால் அவர்கள் வெளிப்படையாகவே அதிக நபர்களுடனும் பரிவாரங்களுடனும் இன்னபிற பொருட்களுடனும் தான் வருவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் அந்த இரு ஆண்கள் ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் போது அழுக்கடைந்த கைகளுடனோ, வெளுத்த கைகளுடனோ, பெரும்பாலும் அந்தக் கைகளில் ஏதோவொரு வகைக் கத்தியோ, கோடரியோ, நீளமான வாளோ, குத்துவாளோ, வெட்டுக் கத்தியோ, பட்டாக் கத்தியோ, மடக்குக் கத்தியோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஜோடி துருப்பிடித்த பழைய சவரக் கத்தியோ இருக்கும். சில நேரங்களில் துப்பாக்கி. அது சூழ்நிலையைப் பொருத்தது. அது அப்படித்தான் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் இந்நீண்ட சாலையானது அஸ்தமிக்கும் கதிரவனைச் சந்திக்கும் இடத்தில் தொடுவானத்தில் இந்த இருவரையும் நாங்கள் கண்டோம் என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

இந்த நேரத்திற்கு அவர்கள் வருவதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர்கள் எங்கு வந்து சேர்ந்தாலும் அஸ்தமன நேரம் அவர்களுக்கு சரியான நேரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். பெண்கள் எல்லோரும் அப்போதுதான் பாலையிலிருந்தோ, பண்ணையிலிருந்தோ, நகரத்தின் அலுவலகங்களிலிருந்தோ, பனிமலைச் சாரல்களிலிருந்தோ வந்திருந்தார்கள். குழந்தைகள் கோழிகளுக்கருகே புழுதியிலோ உயரமான அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வெளியிலுள்ள பூங்காக்களிலோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் கொடுமையான வெக்கையிலிருந்து தப்பிக்க முந்திரி மரங்களின் நிழலிலும் ரயில்வே பாலத்தின் அடியிலும் படுத்துக் கிடந்தனர். மிக முக்கியமாக இளம்பெண்கள் தங்கள் குடிசைகள் அல்லது வீடுகளுக்கு வெளியே ஜீன்ஸ் அணிந்தோ, முகத்திரை அணிந்தோ அல்லது லைக்ரா குட்டைப் பாவாடை அணிந்தவாறு சுத்தம் செய்தல் அல்லது சமையல் செய்வதோ, இறைச்சி அரைப்பதோ, தங்கள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியபடியோ இருந்தனர். அது அந்த நேரத்தைப் பொறுத்தது. தீரமான வலிமை கொண்ட ஆண்கள் இன்னும் அவர்கள் சென்றிருந்த இடத்திலிருந்து திரும்பவில்லை.

இரவுக்கென்று சில சாதகங்கள் உள்ளன. வியப்பின் கூறுகளை சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அந்த இருவரும் குதிரையின் மீதோ, வெற்றுக் காலில் நடந்தோ, இருவரும் ஒருவரையொருவர் பிடித்தபடி சுசுகி ஸ்கூட்டரிலோ அல்லது ராணுவ ஜீப்பின் மீது ஏறி நின்றபடியோ நள்ளிரவில் வந்து சேர்ந்தார்கள் என்பதை மறுப்பார் எவருமில்லை. ஆனால் இருளுக்கென்று சில பாதகங்களும் உள்ளன. ஏனெனில் அவர்கள் இருவரும் எப்போதும் கிராமங்களுக்கே வருகின்றனர், நகரங்களுக்கு அல்ல. உலகின் எப்பகுதி என்பதோ நீண்ட வரலாற்றில் எப்பகுதியில் என்பதோ இங்கு முக்கியமல்ல. அவர்கள் நள்ளிரவில் வந்தால் ஒரு முழுமையான இருளையே சந்திக்கிறார்கள். அந்த மாதிரியான இருளில் நீங்கள் உங்கள் மனைவியுடையதா தாயுடையதா அல்லது கன்னிமைப் பருவத்தின் இளஞ்செழுமையில் இருக்கும் பெண்ணுடையதா அல்லது யாருடைய கணுக்காலைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் மிகச் சரியாகச் சொல்ல முடியாது.

அவர்களில் ஒருவன் உயரமாக- அழகென்று சொல்ல முடியாது- சிறிது இருண்ட முகமும் கொடூரன் போலவும், மற்றவன் குட்டையாக தந்திரசாலியான நரிமுகம் கொண்டவன் போலவும் இருந்தனர். குட்டையன் கிராமத்தின் நுழைவாயில் போன்று காட்சியளித்த கோககோலா பதாகையின் மீது சாய்ந்தபடி நட்பாக வணங்குவது போல கையுயர்த்த அவனது கூட்டாளி எதையோ மென்றபடி தன் கையிலிருந்த குச்சியைத் துக்கி வீசியவாறே அவனிடம் புன்னகைத்தான். அவர்கள் ஒரு விளக்குக் கம்பத்தின் மீது சாய்ந்தபடி சூயிங்கம் மென்று கொண்டிருக்க போர்ஷ்ட் சூப்பின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ஆனால் நாங்கள் எங்கள் கிராமத்தில் போர்ஷ்ட் சூப் செய்வதில்லை. நாங்கள் காஸ்காஸ், டைல் மீன்கள் உண்பதால் அந்த மணமும் காற்றில் தவழ்ந்தது. டைல்மீனின் வாசத்தினை எங்களால் இன்று கூட இயல்பாக ஏற்று சுவாசிக்க முடிவதில்லை. ஏனென்றால் அந்த வாசம் இந்த இரு ஆண்களும் எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்த நாளை நினைவூட்டியபடியே இருக்கிறது.

நெட்டை மனிதன் நட்பாக தன் கைகளை உயர்த்தியபோது பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த கிராமத் தலைவரின் மனைவியின் சொந்தக்காரி வேறு வழியில்லாமல் நெட்டையன் முன்பு நிற்க வேண்டியதானது. அவனுடைய பட்டாக் கத்தி சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்ததும் உயர்த்திய அவள் கை முழுவதும் நடுங்கியது.

ஏறக்குறைய நட்பு ரீதியிலான வாழ்த்துக்களுடன் தான் அந்த இரு ஆண்களும் கிராமத்திற்கு வந்து சேர்வதை விரும்புகிறார்கள். அது வெறுக்கப்படுவதற்கு முன்போ அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முன்போ சில மணி நேரங்களாவது அவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் தாங்கள் விரும்பப்படவே நினைக்கிறார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. அவர்கள் மீது விருப்பம் அல்லது ஆர்வத்தை ஏற்படுத்துவதை விட அச்சத்தை ஏற்படுத்துவதே அவர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் நாங்கள் அவர்களைப் பார்த்து அச்சமடைவதுதான் அவர்களின் இறுதி நோக்கமாக இருக்கிறது.

அவர்களுக்காக உணவு சமைக்கப்பட்டது. நேரத்திற்கேற்ப உணவு சமைக்கிறோம் என்றோம். அல்லது உணவு கொடுங்கள் என்று அவர்களே வேண்டிக் கொண்டார்கள். சில நேரங்களில் அருகில் உள்ள கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 14வது மாடியில் உள்ளே நுழைந்த இருவரும் சோபாவை இழுத்து வந்து, ஓடிக் கொண்டிருக்கும் டி.வி. முன்பு போட்டுப் படுத்தபடி, புரட்சியின் மூலம் தாங்கள் அமைத்த புதிய அரசாங்கத்தின் புதிய தலைவரானவர் கோமாளி போன்ற தொப்பியை அணிந்து கொண்டு அணிவகுப்பை முன்னும் பின்னும் நடந்து கொண்டே பார்த்துப் பேசுவதைக் கண்டு சிரித்தனர். அந்த வீட்டின் வயதான பெண்மணியை தோழமையுடனும் அழுத்தமாகவும் அணைத்தபோது அவள் அழுதாள். (“நாம் தோழர்கள் அல்லவா? நாமெல்லோரும் இங்கு தோழர்கள் இல்லையா? என்று கேட்டான் நெட்டை மனிதன்.)

இப்படி ஒரு வகையில் அவர்கள் வந்தார்கள். இந்த கிராமத்திற்கு அவர்கள் அது போன்று வரவில்லை என்றாலும் இது போன்ற வகையிலும் வந்தார்கள்.எங்களிடம் தொலைக்காட்சி இல்லை. பனி இல்லை. நாங்கள் தரைத் தளத்திற்கு மேல் குடியிருந்ததும் இல்லை. இருந்தாலும் விளைவுகள் ஒன்று போலத்தான் உள்ளன. என்னவென்று தெரியாத அமைதி கலந்த அச்சமும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது. எங்கள் கிராமத்து வழக்கப்படி ஒரு இளம் பெண் அவர்களுக்கு ஒரு தட்டில் உணவை எடுத்து வந்தாள். “என்ன கருமம்டா? என்றவாறு நெட்டையன் தன் அழுக்கான விரல்களால் பட்டும் படாதவாறு அவள் கொண்டு வந்த டைல் மீன் துண்டினை எடுத்தான். “ஓ…எங்கம்மா இதை அடிக்கடி செய்வா. நல்ல வேளை அவள் ஆன்மாவை ஆண்டவன் அடக்கிவிட்டான்! என்றான் ஓநாய் முகம் கொண்ட குட்டையன். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இளம்பெண்ணை தங்கள் மடியின் மீது மாற்றி மாற்றித் துக்கிப் போட்டு விளையாடியபோது வயதான பெண்கள் எல்லோரும் சுவற்றோரம் ஒட்டி நின்றபடி அழுது கொண்டிருந்தனர்.

உணவுக்குப் பிறகு அந்த கிராமத்தில்- மது அனுமதிக்கப்பட்டிருந்தால்- குடித்துவிட்டு வந்து வெளியே பார்க்க என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள அவ்விருவரும் ஒரு நடை செல்வார்கள். அதுதான் திருடுவதற்கு ஏற்ற நேரம். அந்த இரு ஆண்களும் எப்போதும் திருடுவார்கள்- இந்த சொல்லை சில காரணங்களுக்காக பயன்படுத்துவதை அவர்கள் விரும்பாவிடிலும் உங்களுடைய கடிகாரத்தையோ, சிகரெட்டையோ, பணப்பையையோ, தொலைபேசியையோ அல்லது மகளையோ பறிக்கும் போது மறக்காமல் “உங்கள் பரிசுக்கு நன்றி! என்றோ “லட்சியத்திற்காய் செய்த தியாகத்தை நாங்கள் பாராட்டுகிறோம்! எனச் சொல்லும் போது நெட்டையன் நக்கலாகச் சிரித்து வைப்பதால் குட்டையன் தங்களது செயலை என்னதான் பெருந்தன்மையுடையதாக்க நினைத்தாலும் அது வீணாகிவிடும். சில இடங்களில் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வீடு செல்கையில் ஒரு தைரியமான சிறுவன் தன் தாயின் பின்னாலிருந்து பாய்ந்து வந்து ஓநாய் முகம் கொண்ட குட்டையனைத் தள்ள முயற்சிப்பான். எங்கள் கிராமத்தில் 14 வயது கொண்ட இந்தப் பையனை நாங்கள் கிங் ஃபிராக் என்றழைப்போம். ஒருமுறை அவன் நான்கைந்து வயது சிறுவனாக இருந்தபோது நமது கிராமத்தில் யார் பெரும் சக்தி கொண்டவர் என்று யாரோ சிலர் கேட்டபோது வாசலில் இருந்த அறுவறுப்பான பெரிய தேரையைக் காட்டி “இந்தக் கிங் ஃபிராக் தான், ஏன்னா என் அப்பா கூட இவனைப் பார்த்துப் பயப்படுவார்” என்றான். 14 வயதுடைய அவன் தைரியமானவன் என்றாலும் கூட அஜாக்கிரதையானவன் என்பதால் தான் அவன் தாய் அவனை ஒரு குழந்தை போல தனக்குப் பின்னால் நிறுத்தி மறைத்துக் கொள்வாள்.

ஆனால் இது போன்ற தைரியமான செயல்கள் உண்மையாகவும் தொடர்ந்தும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்றன என்பதை விளக்குவது கடினமானாலும் அந்த தைரியம்- எதற்கும் உதவாது என்றாலும் கூட- ஒரு அழகிய மலையை அல்லது முகத்தைப் பார்த்தால் எப்படி எளிதில் மறக்க முடியாதோ அதுபோல இதையும் மறக்க முடியாது. அது எப்படியோ உங்களுக்கு நீங்களே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை எப்படியோ மெலிதாக அறிந்த நெட்டையன் பளபளக்கும் பட்டாக் கத்தியை ஓங்கி சிரமமில்லாமல் ஒரு மலரைக் கொய்வது போல அச் சிறுவனை அவன் வாழ்விலிருந்து பிரித்தான்.

ரத்தம் சிந்தத் துவங்கியவுடன், அதுவும் பெருகியோடும் ரத்தத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பம் அதுவரை நிகழ்ந்த விருந்துபசாரத்தையும் அச்சத்தையும் கரையச் செய்தது. அப்போது மிக அதிகமாகக் குடித்தவர்கள், அதிலும் புதுமையாக, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள் பாட்டில் பாட்டில்களாக குடித்துவிட்டு அழுதார்கள். இப்படியொரு கொடூரத்தினை நிகழ்த்த மட்டுமல்ல அது நடக்கும்போது அருகிலிருந்து வெறுமனே வேடிக்கை பார்க்கவும் அசாத்திய துணிச்சல் தேவை. ஆனால் பெண்கள்! எங்கள் பெண்களை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் பெண்களைப் பாதுகாக்க சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த நெட்டையன் கடுப்பாகி தரையை ஓங்கி உதைத்தபடி, ‘இந்தப் பொட்டைங்களுக்கு என்னாச்சு? இதோட முடிஞ்சுது, நான் ரொம்பக் குடிச்சிட்டேன்” என்றான்.

குட்டையன் கிராமத் தலைவரின் மனைவியின் அத்தை மகளின் முகத்தில் குத்தியபடி (தலைவரின் மனைவி பக்கத்து கிராமத்தில் உறவினர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டார்) அவளருகே வந்து புரட்சியின் கரங்கள் வருவதை அறிவித்தான். இது போல பெண்கள் முன் காலத்திலும் அண்மைக் காலத்தில் யானைக் கடவுளின் கிராமத்திலும் பல பழைய புதிய ஊர்களிலும் நின்றிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். அந்த சமயத்தில் ஏனென்று அறிய முடியாத பெண்களின் மனோதைரியம் பெரிய விஷயம் இல்லையென்றாலும் – அந்த இருவரையும் இந்த கிராமத்திற்கு வருவதைத் தடுப்பதோ அல்லது மோசமான கொடுமைகள் செய்வதைத் தடுப்பதோ இயலாது என்றபோதும்- எப்போதும் நிகழ்வதில்லை. ஒரு பெண் இருண்ட முகம் கொண்ட நெட்டையனைப் பார்த்து காறி உமிழ்ந்தாள். அதைப் பார்த்த குட்டையன் அப்பெண்ணின் யோனியில் எட்டி உதைத்தபோது அவர்கள் செய்ய வேண்டிய குருரங்களுக்கான வழி கிடைத்தது. பாதுகாப்பு அரண் சிதறியது.

அடுத்த நாள் கிராமத்தில் என்ன நடந்தது என்பதைக் கேட்டவர்களுக்கேற்ப ஒவ்வொருவரும் கூடக் குறைய சொல்லிக் கொண்டிருந்தனர். படைவீரன், பெண்மணி, பக்கத்து கிராமத்திலிருந்து ஆர்வத்துடன் வந்த ஒருவன் அல்லது தனது நாத்தனார் வீட்டிலிருந்து திரும்பி வந்த கிராமத் தலைவரின் மனைவி என பெரும்பாலும் எல்லோரும் கேட்கும் கேள்வி- யார் அவர்கள்? இந்த ஆண்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? என்ன மொழி பேசினார்கள்? அவர்களுடைய முகத்திலும் கைகளிலும் என்ன அடையாளம் இருந்தது?- ஆனால் எங்கள் கிராமத்தில் அதிகாரவர்க்கம் என்ற ஒன்று இல்லாததும் ஒரு அதிர்ஷ்டம்தான். எல்லாவற்றையும் சொன்னபிறகு கிராமத் தலைவரின் மனைவி தலைவரைவிட உண்மையான தலைமையாக மாறிப்போனார். அவள் உயரமாகவும், அழகாகவும், தைரியசாலியாகவும் இருந்தாள். சில இடங்களில் வெம்மையாகவும் சில இடங்களில் கூதலாகவும் வீசும் பாலைவனச் சூறைக்காற்று கா ஹரமாட்டனை எல்லோரும் வேறு வழியில்லாமல் சுவாசிப்பது போல்- ஒரு சிலராலேயே இது போன்ற ரத்தக் களறியில் சுவாசிக்க முடியும் என்றாள். அது போன்ற மனிதர்கள் கா ஹரமாட்டன் போல தங்களையும், அடையாளங்களையும், பெண்களையும் இழப்பார்கள். அவர்கள் எந்த சுழற்காற்றையும் ஏற்படுத்தமாட்டார்கள்.

மாறாக அந்தக் காற்றாகவே அவர்கள் இருப்பார்கள் என்றாள். இது ஒரு உண்மை உருவகம். ஆனால் அவள் அப்படித்தான் இருந்தாள். அவள் நேராக இளம்பெண்களிடம் சென்று நடந்ததைக் கூறுமாறு கேட்டாள். கடுமையான அவள் வார்த்தைகளில் மனமுருகிய பெண்ணொருத்தி பேசினாள். அந்தக் குட்டையன் தானாக ஒருதலைக் காதல் கொண்டவனாக என் மார்பின் மீது தலைசாய்த்து தனது கதையை- தான் ஒரு அநாதை என்றும் பல்லாண்டுகள் அநாதையாகவே வாழ்வதாகவும் எல்லா ஆண்களையும் போல வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தாகவும் பயங்கரங்களைச் சந்தித்துள்ளேன் என்றும் இப்போது தனக்கு இந்தப் பெண்கள் மூலம் குழந்தைகள் வேண்டும், நிறைய ஆண் குழந்தைகள், அழகான, வலிமையான ஆண்- ஆம். பெண் குழந்தைகளும் கூட…இந்தக் குழந்தைகள் படையுடன் நாங்கள் கிராம நகரங்களுக்கு அப்பால் சென்று வாழ்வோம் என்று பிதற்றினான். அவன் பெயரை நானறிய வேண்டும் என்று விரும்பினான் என்று வியப்புடன் கூறினாள் அப்பெண். அவனுக்கு வெட்கமே இல்லை. அவன் இந்த கிராமத்தையோ, என் உடல் மீதோ கடந்து சென்றதை நினைத்துப் பார்க்க விரும்பவுமில்லை; மற்றவர்கள் தன்னை எவ்வாறு அழைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. அநேகமாக அது அவனுடைய உண்மையான பெயரில்லை, ஆனால் அவன் என் பெயர் ————— என்றான்” என்று கூறினாள்.

இதைக் கேட்ட தலைவரின் மனைவி சட்டென்று அறையை விட்டு வெளியேறி வேகமாகச் சென்றாள்.

ஜேடி ஸ்மித் / தமிழில்- க.ரகுநாதன்